W W 1 0 W 2: கடைசி ஓவரில் கலக்கிய சந்தீப் சர்மா - வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியானது தொடக்கத்தில் தடுமாறினாலும் திலக் வர்மா - நேஹால் வதேரா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 65 ரன்களையும், நேஹால் வதேரா 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 49 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அதிலும் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சந்தீப் சர்மா மிரட்டினார். அதன்படி இன்னிங்ஸின் கடைசி ஓவரை சந்தீப் சர்ம வீச, ஓவரின் முதல் பந்திலேயே 65 ரன்களை எடுத்திருந்த திலக் வர்மா தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜெரால்ட் கோட்ஸியும் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க முயற்சிக்க பந்து நேரடியாக ஷிம்ரான் ஹெட்மையர் கைகளில் தஞ்சமடைந்தது.
அதன்பின் அடுத்த பந்தை எதிர்கொண்ட பியூஸ் சாவ்லா சிங்கிள் எடுத்து ஸ்டிரைக்கை டிம் டேவிட்டிடம் ஒப்படைந்தார். இதில் டிம் டேவிட்டும் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் பந்தை அடிக்க அது ரியான் பராக் கைகளில் தஞ்சமடைந்தது. இதன்மூலம் கடைசி ஓவரி மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 3 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்நிலையில் சந்தீப் சர்மா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.