இந்திய அணியில் விளையாடுவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் - சஞ்சு சாம்சன்!

Updated: Sat, Sep 17 2022 19:33 IST
Image Source: Google

டி20 உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற வில்லை. இது ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

ஃபார்மில் இல்லாத ரிஷப் பண்ட்டிற்கு அணியில் இடம் கிடைத்த போது, சஞ்சு சாம்சனுக்கு ஏன் கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் சஞ்சு சாம்சன்சனுக்கு இடம் கிடைக்காததை கண்டித்து ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர்.

இந்த நிலையில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய ஏ அணி கேப்டனாக சஞ்சு சம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடர் வரும் 23ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் இடம் கிடைக்காதது குறித்து தனது மவுனத்தை முதல் முறையாக சஞ்சு சாம்சன் கலைத்துள்ளார்.

இது குறித்து பேசி அவர்,“ தற்போது சமூக வலைத்தளத்திலும் தொலைக்காட்சிகளிலும் சஞ்சு சாம்சன் யாருக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் ரிஷப் பண்டிற்கு பதிலாகவும் மற்றும் சிலர் கேஎல் ராகுலுக்கு பதிலாகவும் தாம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் நான் தெளிவாக சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். கே.எல் ராகுலும் ரிஷப் பண்டும் என்னுடைய அணிக்காக தான் விளையாடுகின்றனர். என் அணி வீரர்கள்குள்ளே நான் போட்டி போட தொடங்கினால், அது என் நாட்டை நானே கைவிடும் மாதிரி ஆகிவிடும். என்னைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியதை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் சரி இப்போதும் சரி, இந்தியா தான் நம்பர் ஒன் அணியாக விளங்குகிறது. இதில் சிறந்த 15 வீரர்களில் நானும் ஒருவன் என்று நினைக்கும் போது அது பெரிய சாதனையாக கருதுகிறேன். அதேபோல் நான் என் மனதளவில் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணுகிறேன். நேர்மறையான எண்ணங்களுடன் இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும்” என்று பதிலளித்துள்ளார். சஞ்சு சம்சனின் இந்த பதில் ரசிகர்களை அமைதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை