ஆசிய கோப்பை 2023: இந்திய அணியிலிருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்?
நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், இரு அணிகளும் மொத்தமாக 3 முறை மோதுவதற்கான சூழல் அமைந்துள்ளது. இதனால் ஆசியக் கோப்பைத் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிகமாக எதிர்பார்த்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணி வீரர்கள் இலங்கையிலேயே முகாமிட்டு, ஆசியக் கோப்பைக்காக தயாராகி வருகின்றனர். இதனால் ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்டோர் கண்காணிப்பில் நடக்கவுள்ள பயிற்சி முகாமில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி நாளை மறுநாள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி முடிவடைந்த பின், ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த அணியில் கேஎல் ராகுல், பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரை தேர்வு செய்ய பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்திய அணியை அறிவிப்பதற்கு முன் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் பந்துவீச்சை பார்க்க வேண்டும் என்று தேர்வுக் குழுவினர் காத்திருக்கிறார்கள்.
இதன் காரணமாக இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 5 முறை பேட்டிங் செய்ய சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த 5 இன்னிங்ஸ்களிலும் ஒரேயொரு அரைசதம் மட்டுமே சஞ்சு சாம்சன் விளாசி இருக்கிறார். இதனால் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட வாய்ப்பே இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.