ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Advertisement

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 17 ரன்கள் எடுத்த போது ரோவ்மன் பாவெலின் அசாத்தியமான கேட்ச்சால் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான விராட் கோலியும் 33 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர் கேமரூன் க்ரீன் 27 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

அதன்பின் அதிரடியாக விளையாடி ராஜத் பட்டிதார் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 34 ரன்களுக்கும், தினேஷ் கார்த்திக் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட மஹிபால் லாம்ரோரும் 32 ரன்கள் எடுத்த நிலைடில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஸ்வப்நில் சிங், கரண் சர்மா ஆகியோர் ஒருசில் பவுண்டரிகளை அடிக்க ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - டாம் கொஹ்லர் காட்மோர் இணை அதிரடியான தொடாக்கத்தைக் கொடுத்தனர். இதில் கொஹ்லர் காட்மோர் 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, அரைசதத்தை நெருங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 45 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் கேப்டன் சஞ்சு சாம்சனும் 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக் 36 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 26 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த ரோவ்மன் பாவெல் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 16 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சமசன் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளை பதிவுசெய்த வீரர்கள் பட்டியளில் மறைந்த முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே 31 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்திருந்தார். 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சஞ்சு சாம்சன் 31 வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், முன்னாள் கேப்டன் ஷேன் வார்னேவின் சாதனையையும் சமன்செய்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு அவர் ஒரு வெற்றியைப் பதிவுசெய்யும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன் எனும் சாதனையை படைப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News