இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சர்ஃப்ராஸ் கான்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்திய நிலையில், டெவான் கான்வே, டிம் சௌதீ ஆகியோரது அரைசதத்தின் காரணமாக முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்களையும், டெவான் கான்வே 91 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்திப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசி அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ரிஷப் பந்த் 99 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்திருந்தனர்.
இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி மற்றும் வில்லியம் ஓ ரூர்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் மழை குறுக்கிட்டதன் காரணமாக இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டமானது முன்கூட்டியே முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த இன்னிங்ஸில் சர்ஃப்ராஸ் கான் 150 ரன்களை அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக தனித்துவ சாதனை படைத்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். அதன்படி இந்தியாவின் 92 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ரன்கள் ஏதுமின்றியும், மற்றொரு இன்னிங்ஸில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த மூன்றாவது வீரர் எனும் சாதனையை சர்ஃப்ராஸ் கான் படைத்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக 1953 ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில், முதல் இன்னிங்ஸில் மாதவ் ஆப்தே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 163 ரன்களைச் சேர்த்தார். அதன்பிறகு, 1996ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நயன் மோங்கியா 152 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்திருந்தார்.