SAW vs ENGW, 1st ODI: மரிஸான், வோல்வார்ட் அசத்தல்; இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்து மகளிர் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதுடன் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நேற்று தொடங்கியது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கிம்பெர்லியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைகள் சோஃபியா டங்க்லி 4 ரன்னிலும், டாமி பியூமண்ட் 11 ரன்னிலும், நாட் ஸ்கைவர் பிரண்ட் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டேனியல் வையட் 11 ரன்களுக்கும், ஏமி ஜோன்ஸ் 21 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்ட்ன் ஹீத் நைட் 40 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறமிறங்கிய சார்லீ டீன் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 47 ரன்களைச் சேர்த்தார்.
ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மரிஸான் கேப் மற்றும் அன்னேரி டெர்க்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மலாகா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய வீராங்கனைகள் தஸ்மின் பிரிட்ஸ் 13 ரன்னிலும், சுனே லூஸ் 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் வொல்வார்ட்டுடன் இணைந்த அன்னேரி டெர்க்சன் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
இதில் டெர்க்சன் 27 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மரிஸான் கேப்பும் 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் லாரா வோல்வார்ட் அரைசதம் கடந்ததுடன் 7 பவுண்டரிகளை விளாசி 59 ரன்களையும், அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடிய நடின் டி கிளார்க் 11 பவுண்டரிகளுடன் 48 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 38.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பாட்ட மரிஸான் கேப் ஆட்டநாயகன் விருதை வென்றார்.