சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஸ்காட் போலண்ட்!
Scott Boland Record: ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 121 ரன்களில் ஆல் அவுட்டாகி 202 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 27 ரன்களில் ஆல் அவுட்டானதுடன் 176 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட்டுகள் உள்பட 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இந்நிலையில் இப்போட்டியில் ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். இப்போட்டியில் இன்னிங்ஸின் 13ஆவது ஓவரை ஸ்காட் போலண்ட் வீசிய நிலையில், ஓவரின் முதல் பாந்தில் ஜஸ்டின் க்ரீவ்ஸையும், இரண்டாவது பந்தில் ஷமார் ஜோசபையும், மூன்றாவது பந்தில் ஜொமல் வாரிக்கனையும் வீழ்த்தி தனது ஹாட்ரிக் விக்கெட்டுகளைப் பதிவுசெய்து அசத்தினா.
இதன்மூலம் பகல்-இரவு டெஸ்ட் அல்லது பிங்க் பந்து டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை ஸ்காட் போலண்ட் படைத்துள்ளார். இதுதவிர்த்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய 10ஆவது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய 6ஆவது பந்துவீச்சாளர் எனும் சாதனைகளையும் படைத்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
முன்னதாக ஆஸ்திரேலிய அணி தரப்பில் பீட்டர் சிடில், கிளென் மெக்ராத், ஷேன் வார்னே, மைக்கேல் ஹூக்ஸ் உள்ளிட்டோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். அதேசமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஜஸ்பிரித் பும்ரா, நஷீம் ஷா, கேசவ் மஹாராஜ், கஸ் அட்கின்சன் மற்றும் நௌமன் அலி ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.