நடத்தை விதிகளை மீறியதாக எட்வர்ட்ஸ், மஹ்மூத், கோட்ஸிக்கு அபராதம்!
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் போது தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் போது ஜெரால்ட் கோட்ஸி கள நடுவரின் முடிவை ஏற்கமறுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் அவரது பந்துவீச்சின் போது கள நடுவர் வைட் என்பதை கொடுத்ததற்கு கோட்ஸி தனது எதிர்பினை தெரிவித்திருந்தார்.
ஐசிசி நடத்தை விதிகளின் படி இது குற்றம் என்பதால் ஜெரால்ட் கோட்ஸிக்கு ஒரு கரும்புள்ளி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோட்ஸி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக, அவர் மேற்கொண்டு விசாரணைக்கு வர தேவையில்லை என்று ஐசிசி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் ஓமன் அணியின் சுஃபியான் மஹ்மூத் ஆகியோருக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
அதன்படி நெதர்லாந்து - ஓமன் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியின் போது கள நடுவர்களின் முடிவை ஏற்க மறுத்ததன் காரணமாக அவர்களுக்கு அபராத விதிக்கப்பட்டுள்ளது. இதில் நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங்கின் போது தனக்கு அவுட் என தீர்ப்பு வழங்கிய நடுவரை நோக்கி பேட்டை நீட்டியதுடன், பெவிலியன் திரும்பிய சமயத்தில் பேட்டை தூக்கி எறிந்தும் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் அவருக்கு இரண்டு கரும்புள்ளிகளை விதித்ததுடன், போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபாராதமாகவும் விதிக்கப்பட்டுள்ள்து. அதேபோல் இப்போட்டியின் போது ஓமன் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுஃபியான் முஹ்மத் விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடும் விதமாக ஆக்ரோஷமாக செயல்பட்டதன் காரணமாக ஒரு கரும்புள்ளியும், போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.