வெ.இண்டீஸ், வங்கதேச தொடர்களை வைத்து டி20 உலகக்கோப்பைகான வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் - ஆரோன் ஃபிஞ்ச்!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்காக பல்வேறு கிரிக்கெட் அணிகள் தயாராகி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய அணி, அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. மேலும் அதைத்தொடர்ந்து வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
ஆனால் தொடர்ச்சியான பயோ பபுள் சூழல் காரணமாக, ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், கம்மின்ஸ் உள்ளிட்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் ஏழு பேர் இத்தொடர்களிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய, இத்தொடர்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுமென அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய ஆரோன் ஃபிஞ்ச்,“ஆஸ்திரேலியாவுக்காக கிரிக்கெட் விளையாடுவதும் சிறப்பாக செயல்படுவதும் இறுதியானது என்பது என் கருத்து. எனவே, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுக்கு இடையேயான சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் டி20 உலகக்கோப்பைகான ஆஸ்திரேலிய அணியில் இடத்தை பிடிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஆரோன் ஃபிஞ்ச்சின் இந்த கருத்தினால் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வார்னர், மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஸ்மித் உள்ளிட்டோர் அணியில் சேர்க்கப்படுவார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.