அறிமுக டெஸ்ட்டில் சாதனைகளை குவித்த ஷஃபாலி!
பிரிஸ்டோல் நகரில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்தது.
இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 81.2 ஓவா்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது. ஷஃபாலி வர்மா 96 ரன்களும் மந்தனா 78 ரன்களும் எடுத்தார்கள். இங்கிலாந்து அணியில் சோஃபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 3ஆ நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. ஷஃபாலி வர்மா 55, தீப்தி சர்மா 18 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்றைய ஆட்டத்தில் ஷஃபாலி வர்மா, 83 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் முதல் இன்னிங்ஸில் 2 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
முதல் டெஸ்டில் 3 சிக்ஸர்களை அடித்த ஷஃபாலி வர்மா, மகளிர் கிரிக்கெட்டில் ஒரே டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் ஒரு டெஸ்டில் இரு அரை சதங்கள் எடுத்த இளம் வீரர் என்கிற பெருமையையும் அவர் அடைந்துள்ளார். அதேசமயம் இந்தியா சார்பில் இச்சாதனையை படைக்கும் இராண்டாவது நபர் எனும் பெருமையையும் ஷஃபாலி பெற்றுள்ளார்.
சர்வதேச மகளிர் டெஸ்ட்டில் அதிக சிக்சர் அடித்தவர்கள் (ஒரு போட்டியில்):
- ஷஃபாலி வர்மா - இந்தியா - 3 சிக்சர்கள்
- அலிஷா ஹீலி - ஆஸ்திரேலியா - 2 சிக்சர்கள்
- லாரன் வின்பீல்ட் - இங்கிலாந்து - 2 சிக்சர்கள்
- ஷெல்லி நிட்ச்கே - ஆஸ்திரேலியா - 2 சிக்சர்கள்
- லாரா நியூட்டன் - இங்கிலாந்து - 2 சிக்சர்கள்