இந்தியாவுக்கு எதிரான ஒவ்வொரு போட்டியும் சிறப்பு வாய்ந்தது - ஷாஹின் அஃப்ரிடி!
2023 ஆசியக் கோப்பையின் இரண்டாவது சுற்று மிகப்பெரிய போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நாளை இலங்கை கொழும்பு மைதானத்தில் மதியம் துவங்க இருக்கிறது. இந்தப் போட்டிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ரிசர்வ் டே அறிவித்திருப்பது தற்பொழுது பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. மற்ற அணிகளும் தங்களுக்கு ரிசர்வ் டே வேண்டும் என்று கேட்டு இருக்கின்றன. இதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் என்ன முடிவு செய்யும்? என்பது இன்னவரை தெரியவில்லை.
நடப்பு ஆசியக் கோப்பை முதல் சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விளையாடிய முதல் இன்னிங்ஸ் மட்டுமே நடைபெற்றது. மழையின் காரணமாக போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகின் ஷா அப்ரிடி இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரது விக்கெட்டையும் போல்ட் முறையில் கைப்பற்றி அசத்தினார். இந்திய டாப் ஆர்டர் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களிடம் சரண் அடைந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய ஷாஹின் அஃப்ரிடி, “இந்தியாவுக்கு எதிரான ஒவ்வொரு போட்டியும் சிறப்பு வாய்ந்தது. மக்கள் இந்த போட்டியில் நிறைய எதிர்பார்க்கிறார்கள். நான் 16 வயதிற்குட்பட்ட பாகிஸ்தான் அணிக்கு விளையாடுவதற்கு முன் இருந்து, இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு ஒரு ரசிகனாக காத்திருந்திருக்கிறேன். இதுவரையில் என்னுடைய சிறந்த ஸ்பெல் என்று கடந்த போட்டியில் வீசியதை சொல்ல முடியாது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே இன்னும் பல இருக்கும். எனவே என்னுடைய சிறந்தது இன்னும் வெளியில் வரவில்லை.
பாகிஸ்தான் அணிக்காக இவ்வளவு சிறிய வயதில் நீங்கள் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் புதிய பந்தைக் கையாண்டால், உங்களிடமிருந்து மக்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார்கள். ஹாரிஸ் எங்களை விட வேகமானவர். அவருடைய வேகத்தால் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். நானும் நசீமும் ஆரம்ப கட்டத்தில் விக்கெட்டுகளை கைப்பற்ற முயற்சி செய்கிறோம். புதிய மற்றும் பழைய பந்தில் எங்களுடைய ரோல் என்ன என்பது எங்களுக்கு தெரியும். எங்கள் மூவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.