அஃப்ரிடிக்கு மாற்றாக இவரை அணியில் சேருங்கள்; பாகிஸ்தான் ரசிகர்கள் கோரிக்கை!

Updated: Sun, Aug 21 2022 14:05 IST
Image Source: Google

கடந்த 2019ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசியக் கோப்பை தொடர், வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான அணிகளை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் அறிவித்துவிட்டன.

சமீப காலத்தில் நடந்த போட்டிகளில் இந்திய, பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் உள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது. இந்நிலையில், நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று பாகிஸ்தான் அணிக்குப் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை ஷாஹீன் அஃப்ரிடிதான் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கிறார். இடது கையில் இன் ஸ்விங் பந்துகளை அபாரமாக வீசக் கூடியவர். இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடது கை இன் ஸ்விங் பந்துகளுக்கு எதிராக படுமோசமாக திணறக் கூடியவர்கள். கடந்த டி20 உலகக் கோப்பையின்போது அஃப்ரிடி பந்துவீச்சில்தான் இந்திய டாப் ஆர்டர் காலி ஆனது.

ஆசியக் கோப்பையிலும் இது தொடருமா அல்லது இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் அதிரடி காட்டுவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில் ஆசியக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து ஷாஹீன் அஃப்ரிடி காயம் காரணமாக விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

அஃப்ரிடிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால், நான்கு வாரங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால்தான், இந்த கடின முடிவினை அவர்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஹசன் அலியை மாற்று வீரராக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஹசன் அலியை சேர்க்க கூடாது என பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள். மேலும், 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய பேட்டர்களை மிரள வைத்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீரை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

அமீரும் அஃப்ரிடியைப் போல இடது கை இன் ஸ்விங் பந்துகளை அற்புதமாக வீசக் கூடியவர். இதனால், அஃப்ரிடிக்கு மாற்றாக இவரால் மட்டுமே இருக்க முடியும் என்பதுதான் பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்தாக இருக்கிறது.

முகமது அமீர் 2020ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் மோதலில் ஈடுபட்டார். இதனால், தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அமீர், திடீரென்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்தார். 

அதன்பிறகு, சமரசத்திற்கு பிறகு கடந்த ஆண்டு ஜூலையில் ஓய்வு அறிவிப்பனை திரும்ப்பெற விரும்புவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று சிறப்பாக பந்துவீசியிருந்தார். இருப்பினும், இன்னமும் அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவிப்பினை அவர் வாபஸ் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை