சிகிச்சைக்காக லண்டன் செல்லும் ஷாஹீன் அஃப்ரிடி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் தொடங்கியது. உதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. ஏனெனில் கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணி. அந்த தோல்விக்கு ஆசிய கோப்பையில் தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
அதேசமயம் கடந்த டி20 உலக கோப்பையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித், ராகுல், கோலி ஆகியோரை விரைவில் வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்தவர் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது முழங்காலில் காயமடைந்த ஷாஹீன் அஃப்ரிடி, அதற்காக சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் 5-6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதால், ஆசிய கோப்பை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றிலிருந்து விலகினர்.
பாகிஸ்தான் அணியின் மேட்ச் வின்னிங் பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி ஆசிய கோப்பை தொடரில் விளையாடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஷாஹீன் அஃப்ரிடி மேற்சிகிச்சைக்காக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து லண்டன் செல்லவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பிசிபி மருத்துவர் நஜீபுல்லா சூம்ரோ, “ஷாஹீன் ஷா அஃப்ரிடிக்கு தடையற்ற, அர்ப்பணிப்புள்ள முழங்கால் நிபுணர் பராமரிப்பு தேவைப்படுகிறது மற்றும் லண்டன் உலகின் சிறந்த விளையாட்டு மருத்துவ மற்றும் மறுவாழ்வு வசதிகளை வழங்குகிறது. வீரரின் நலன் கருதி அவரை அங்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
லண்டனில் இருக்கும்போது மருத்துவத் துறை அவரது முன்னேற்றம் குறித்து தினசரி கருத்துக்களைப் பெறும், மேலும் ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கோப்பைக்கு முன்பு ஷாஹீன் முழு உடற்தகுதிக்குத் திரும்புவார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.