வயதானவர்களுக்கான கிரிக்கெட் தொடரை தொடங்கும் அஃப்ரிடி!
கிரிக்கெட் உலகில் பல்வேறு லீக் தொடர்கள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இந்தியன் ப்ரிமீரியர் லீக். பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக். வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் ப்ரிமீரியர் லீக் தொடர் என நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடிய முன்னாள் வீரர்கள் மட்டுமே விளையாடும் லீக் ஒன்றை தொடங்குவதாக அறிவித்துள்ளார் அஃப்ரிடி.
தற்போது 42 வயதான அஃப்ரிடி கடைசியாக குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடினார். அதுவே இந்த லீக் தொடரில் தனது கடைசி தொடர் என தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட், 398 ஒருநாள், 99 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். டி20 ஜெயண்ட் என அறியப்படுபவர் அவர். ஆல்-ரவுண்டரும் கூட.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர், "பொழுதுபோக்கு ரீதியாக மெகா ஸ்டார் லீக் தொடர் நடத்தப்படும். இந்த லீக் ராவல்பிண்டியில் செப்டம்பர் மாதம் நடைபெறும். இந்த லீக்கை அறிமுகப்படுத்துவதன் பின்னணியில் உள்ள முக்கியக் காரணம் என்னவென்றால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தடகள வீரர்கள் மற்றும் விளையாட்டு சார்ந்த பத்திரிகையாளர்களுக்கு நிதி உதவி செய்யும் நோக்கில் இது தொடங்கப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும். வெளிநாட்டு வீரர்களும் விளையாடுவார்கள். எனக்கு வயதாகி விட்டது. நான், முஷ்டக் அகமது, இன்சமாம்-உல்-ஹாக் மற்றும் வாக்கர் யூனிஸ் ஆகியோர் இதில் விளையாடுவோம்" என தெரிவித்துள்ளார்.