விராட் கோலி உச்சத்திலிருக்கும் போதே ஓய்வை அறிவிக்க வேண்டும் - சாகித் அஃபிரிடி!
2019ஆம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் சதமடித்த கோலி அதன்பிறகு 1000 நாட்களை கடந்தப் பிறகும் சதமடிக்காமல் இருந்து வந்தார். இதனால், ஆசியக் கோப்பை 2022 தொடரில் கோலி தன்னை நிரூபித்தால் மட்டுமே அடுத்து டி20 உலகக் கோப்பை தொடரில் சேர்க்கப்படுவார் என தகவல் வெளியானது. இதனால், ஆசியக் கோப்பையில் கோலி மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்து காணப்பட்டன.
இந்நிலையில் கோலி முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், அடுத்து ஹாங்ஹாங் அணிக்கு எதிராகவும் அரை சதங்களை விளாசி அசத்தினார். அடுத்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி சதடித்து, ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கோலி சதமடித்ததால் ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் பலர் கோலியை பாராட்டி பேட்டி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி, கோலி உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு அறிவித்துவிட்டால் நல்லது என அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள அவர், “கோலி விளையாடிய விதம் அவர் ஆரம்பத்தில் விளையாடியதுபோலவே இருந்தது. இடையில் சில காலம் அவர் தடுமாறி வந்த நிலையில், ஆசியக் கோப்பையில் தான் யார் என்பதை வெளிப்படுத்தினார். கோலி ஒரு சாம்பியன் வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் ஓய்வு பெறும் நேரம் நெருங்கிவிட்டது.
தற்போதைய நிலையில் கோலி உச்சத்தில் இருக்கிறார். பார்ம் இருக்கும்போதே டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு விலகிக்கொண்டால், அது அவருடைய பெயருக்கு நல்லதாக இருக்கும். இது மிகவும் உயர்ந்த சிந்தனையாகும். இதுபோன்ற முடிவுகளை ஒருசிலர் மட்டுமே எடுப்பார்கள். தற்போது கோலியும் இதேபோன்ற ஒரு முடிவினை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
அஃப்ரிடியிம் இந்த கருத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நல்ல நகைச்சுவை என அவரது நகைச்சுவை உணர்வை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.