டிஎன்பிஎல் 2021: லைக்கா கோவை கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷாருக் கான் நியமனம்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிரடி கிரிக்கெட் வீரர் ஷாருக் கான். இவர் இதுவரை 5 முதல் தர ஆட்டங்களிலும் 25 ஏ, 39 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
இந்தாண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தமிழ்நாடு அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். அதிரடியான ஆட்டத்துக்குப் பெயர் பெற்ற ஷாருக் கானை, ஐபிஎல் ஏலத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 5.25 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது.
அதன்படி இந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 8 ஆட்டங்களில் விளையாடிய ஷாரூக் கான் 107 ரன்கள் எடுத்தார். பின்னர் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அவரது அதிரடி ஆட்டம் தொடர இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த வருடம் நடைபெறவுள்ள தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷாருக் கான் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் லைக்கா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷாருக் கான் தற்போது அந்த அணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளார்.