ரஞ்சி கோப்பை 2022: இரட்டை சதத்தை தவறவிட்ட ஷாருக் கான்!

Updated: Sat, Feb 19 2022 15:59 IST
Image Source: Google

ரஞ்சி கோப்பைப் போட்டி பிப்ரவரி 17 முதல் தொடங்கியுள்ளது. குவாஹாட்டியில் நடைபெறும் எலைட் எச் பிரிவு ஆட்டத்தில் தமிழகமும் தில்லியும் மோதுகின்றன. டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் விஜயசங்கர், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். 

தில்லி அணி முதல் இன்னிங்ஸில் 141.2 ஓவர்களில் 452 ரன்கள் குவித்தது. யாஷ் துல், சிறப்பாக விளையாடி 150 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 25 வயது லலித் யாதவ், 177 ரன்கள் எடுத்தார். 287 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் அடித்தார்.  தமிழகப் பந்துவீச்சாளர் எம். முகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் எதிரணி முதல் இன்னிங்ஸில் 450 ரன்களை எடுத்தபோதெல்லாம் தமிழக அணி ஒருமுறை கூட முன்னிலை பெற்றதில்லை. நிலைமை இப்படியிருக்க, இந்த ஆட்டத்தில் தமிழக அணி என்ன செய்யப்போகிறது என்கிற ஆவல் பலரிடமும் இருந்தது.

தமிழக அணி ஆரம்பத்தில் மிகவும் தடுமாறியது. 162 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தபோது களமிறங்கினார் அதிரடி வீரர் ஷாருக் கான். அதன்பிறகு ஆட்டம் தமிழகம் பக்கம் நகர்ந்தது. இந்திரஜித் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 89 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் ரஞ்சி கோப்பைப் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார் ஷாருக் கான். 

இதன்பிறகு 113 பந்துகளில் 150 ரன்கள் அடித்து தமிழக அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார். 7ஆவது விக்கெட்டுக்கு ஷாருக் கானும் ஜெகதீசனும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள்.  

ஷாருக்கானின் அதிரடி ஆட்டத்தால் தில்லி அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை தமிழ்நாடு தாண்டிச் சென்றது. அதன்பின் இரட்டை சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷாருக் கான் 194 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்ரமளித்தார். 

இதன்மூலம் தமிழக அணி 7 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஜெகதீசன் 48 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை