கிரிக்கெட் பார்க்கும் அனைவருக்குமே இங்கு என்ன நடக்கிறது என்று தெரியும் - ஷாய் ஹோப்!
இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து ஒன்பதாவது முறையும் தங்களது சொந்த மண்ணில் தொடர்ந்து ஆறாவது முறையும் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவி இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறாமல் இருக்கிறது. அதன் பிறகு இந்தியாவுக்கு எதிராக சாதித்து இழந்த பெருமையை மீட்க வேண்டிய நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்களில் சுருண்டுள்ளது.
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப்,என் மனதில் எந்த வார்த்தையுமே தற்போது வரவில்லை. நாங்கள் எந்த மாதிரி விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அதே போல் நாங்கள் சுத்தமாக விளையாடவில்லை. இது போன்ற கடினமான ஆடுகளத்தில் நாங்கள் ரன் சேர்க்க வேண்டிய வழியை கண்டுபிடிக்க வேண்டும்.
நாங்கள் தோல்வியை தழுவியதற்கு இது போன்ற ஒரு காரணத்தை சாக்காக கூற விரும்பவில்லை. ஆனால் கிரிக்கெட் பார்க்கும் அனைவருக்குமே இங்கு என்ன நடக்கிறது என்று தெரியும். வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல திறமை வாய்ந்த இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது நாம் கவனத்தை செலுத்தினால் நிச்சயமாக அவர்கள் பலம் வாய்ந்த வீரர்களாக சர்வதேச கிரிக்கெட்டில் திகழ்வார்கள். இந்திய வீரர்கள் இந்த ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் 150 அல்லது 200 ரன்கள் எடுத்திருந்தால், நிச்சயமாக நெருக்கடி கொடுத்திருக்க முடியும்.
ஆனால் எங்களுடைய பவுலர்களுக்கு நாங்கள் சரியான இலக்கை நிர்ணிக்கவில்லை என்று அவர் கூறினார். வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளம் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இல்லை. பல அனுபவ வீரர்களும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடுவதில்லை” என்று கூறியுள்ளார்.