ஆசிய கோப்பை 2022: இலங்கையுடனான தோல்வி குறித்து ஷாகிப் அல் ஹசன் கருத்து!

Updated: Fri, Sep 02 2022 07:45 IST
Shakib Al Hasan: Spinners bowling no-balls 'a big crime' (Image Source: Google)

ஆசியக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெறும் அணிதான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் மெஹிதி ஹாசன் மிரஜ் 38 26, மிடில் வரிசையில் அஃபிஃப் ஹொசைன் 39, மஹ்முதுல்லா 27, மொசடெக் ஹோசைன் 24ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், அந்த அணி 20 ஓவர்களில் 183/7 ரன்களை குவித்தது.

அதன்பின் இலக்கை துரத்திய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் பதும் நிஷங்கா 20, குஷல் மெண்டிஸ் 60 ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். அடுத்து கேப்டன் ஷனகா 45 கடைசி நேரத்தில் பெரிய ஸ்கோர் அடித்தார். இறுதியில் 2 ஓவர்களுக்கு 27 ரன்கள் தேவைப்பட்டபோது எபாட் ஹோசைனின் 19ஆவது ஓவரில் 17 ரன்கள் சென்றது. 

கடைசி ஓவரை வீச ஸ்பின்னர் மட்டுமே இருந்த நிலையில் மெஹதி ஹாசன் முதல் 3 பந்துகளிலேயே 8 ரன்களை விட்டுக்கொடுத்துவிட்டார். இதனால், இலங்கை அணி 19.2 ஓவர்களில் 184/8 ரன்களை சேர்த்து, 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றது.

இப்போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு பேசிய ஷகிப் அல் ஹசன், ‘‘சில ஓவர்களை சிறப்பாக வீசாததுதான் தோல்விக்கு முக்கிய காரணம். பௌலர்கள் சிறப்பாக செயல்படாததால் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியவில்லை. 

இதனால்தான், கடைசி ஓவரை ஸ்பின்னர் வீசிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஷனகா கடைசி நேரத்தில் அபாரமாக செயல்பட்டார். கடந்த 6 மாதங்களாக நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அடுத்து டி20 உலகக் கோப்பை தொடர் வரவுள்ளது. அதில் சிறப்பாக செயல்படுவதற்கு இப்போது இருந்தே தயாராவோம்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை