என் கணவருக்கு எதிராக சதி நடக்கிறது - ஷகிப் மனைவி ஆவேசம்!

Updated: Sat, Jun 12 2021 15:04 IST
shakib-al-hasan-wife-umme-ahmed-shishir-reacts-to-dpl-2021-incident (Image Source: Google)

கிரிக்கெட் போட்டி ஒன்றில், ஷகிப் அல் ஹசன் கோபத்தால் செய்த செயல் வீபரீதமாக, ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சிக்க, கணவருக்கு ஆதரவாக பொங்கி எழுந்திருக்கிறார் மனைவி.

வங்கதேசத்தின் உள்ளூர் டி20 தொடரான தாக்கா பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோஹம்மெதான் ஸ்போர்டிங் கிளப் - அபஹானி லிமிடேட் அணிகள் மோதின.

இப்போட்டியின் போது வங்கதேச அணியின் தனது சக வீரரான முஷ்பிகுர் ரஹீமுக்கு பந்து வீசிய ஷகிப் அல் ஹசன்,எல்.பி.டபிள்யூ அப்பீலை ஷகிப் கேட்க, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், நிதானத்தை இழந்த ஷாகிப் அல் ஹசன் அங்கேயே ஸ்டெம்ப்புகளை நோக்கி ஓங்கி உதைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதோடு நிற்காமல், கள நடுவருடன் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார்.

அதன் பிறகு, அபஹானி அணி 5.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட, அம்பயர் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். உடனே, பீல்டிங் செய்த இடத்தில் இருந்து கள நடுவரை நோக்கி வேகமாக வந்த ஷகிப், ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடிங்கி, தரையில் வீசினார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பேஸ்புக்கில் இதுகுறித்து ஷகிப் அல் ஹசன் வெளியிட்ட பதிவில்,“அன்புள்ள ரசிகர்களே, எனது மனநிலையை இழந்து போட்டியின் போது மோசமாக நடந்து கொண்டதற்கு மிகவும் வருந்துகிறேன். என்னைப் போன்ற ஒரு அனுபவமிக்க வீரர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கக்கூடாது, ஆனால் சில சமயங்களில் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக இது துரதிர்ஷ்டவசமாக நடக்கிறது. எனது இந்த தவறுக்கு அணி நிர்வாகத்திடமும், போட்டி அதிகாரிகள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் நான் இதை மீண்டும் செய்ய மாட்டேன் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

எனினும், வங்கதேசத்தில் ஷகிப் நடந்து கொண்ட விதம் குறித்து தொடர்ந்து அங்குள்ள டிவி சேனல்கள் செய்தி ஒளிபரப்பி வருகின்றன. இதனால், ரசிகர்கள் பலரும் கடும் அதிருப்தி அடைந்து, ஷகிப்பை விமர்சித்து வருகின்றனர். 

இவற்றையெல்லாம் பார்த்து கடுப்பான ஷகிப் அல் ஹசனின் மனைவி, உம்மே அஹ்மத் ஷிஷிர் (Umme Ahmed Shishir), “இந்த சம்பவத்தை நான் ஊடகங்களைப் போலவே அனுபவித்து வருகிறேன். இறுதியாக தொலைக்காட்சியில் சில செய்திகள் வெளியாகி வருகின்றன. இன்றைய சம்பவத்தின் தெளிவான நிலையை கண்டறிந்த சிலரின் ஆதரவைக் காண்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, குறைந்தபட்சம் சிலராவது எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக தைரியமாக நிற்கிறார்கள்.

 

எவ்வாறாயினும், ஷகிப் வெளிப்படுத்திய கோபத்தை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டி, முக்கிய பிரச்சினை ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுவதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. முக்கிய பிரச்சினை நடுவர்களின் தவறான முடிவுகள். அதனால் தான் ஷகிப் கோபம் அடைந்தார். தலைப்புச் செய்திகள் உண்மையில் வருத்தமளிக்கின்றன. என்னைப் பொறுத்தவரை எல்லா சூழ்நிலைகளிலும் அவரை வில்லனாக சித்தரிப்பது சிறிது காலமாக நடந்து வரும் ஒரு சதி” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை