பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமனம்!

Updated: Wed, Dec 06 2023 21:53 IST
பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமனம்! (Image Source: Google)

டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உலகின் பெரும்பாலான நாடுகள் டி20 லீக் போட்டிகளை நடத்தி வருகின்றன. இந்தியா முதன்முதலாக 2008 ஆம் ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் டி20 தொடரை நடத்தியது. இதன் வெற்றிக்கு பின்னர் பல சர்வதேச நாடுகளும் டி20 லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. இதேபோன்று பாகிஸ்தானிலும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிகள் நடைபெறும் .

அதன்படி பிஎஸ்எல் தொடரின் 9ஆவது சீசன் நெருங்கி வரும் நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் அதற்கு தயாராக தொடங்கிவிட்டன. இதில் சர்ஃப்ராஸ் கான் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர் அணி 2019 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொயின் கான் தற்போது அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதனால் காலியாக இருக்கும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பல்வேறு முன்னாள் சர்வதேச வீரர்களும் விண்ணப்பித்திருக்கும் நிலையில் குயிட்டா அணியின் முன்னாள் வீரரான ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மொயின் கானுக்கு இயக்குனர் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்போது வாட்சன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த  2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடினார். மேலும் அந்த அணி 2019 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற போது அந்த சீசனில் 430 ரன்களைக் குவித்திருந்த ஷேன் வாட்சன் தொடர் நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதன்பின் 2022ஆம் ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நெட் பயிற்சியாளராக இரண்டு வருடங்கள் பணியாற்றினார்.

இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சான்பிரான்ஸிகோ யுனிகார்ன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டிருந்தார்.  2024 ஆம் ஆண்டிற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் வருகின்ற பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 18ஆம் தேதி முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை