சூர்யகுமார் யாதவை 4ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - ஷிகர் தவான்!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான கால அளவே உள்ள நிலையில் இந்திய அணி தங்கள் 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை தேர்வு செய்வதற்கு தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது . இந்திய அணியை பொறுத்த வரை பெரும்பாலான வீரர்கள் முதல் தரத் தேர்வாக இருந்தாலும் நான்காவது இடத்தில் விளையாடக்கூடிய வீரர் யார் என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது .
இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டியில் நான்காவது வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி வந்தார் . உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் நான்காவது இடத்தில் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் காரணமாக வெளியேறியவர் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்தக் காலத்தில் இருந்து குணமடைந்து வருகிறார் .
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் இந்திய அணிக்கு சிறந்த நடுவரிசை ஆட்டக்காரர்களாக கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் . மேலும் அனுபவ வீரர்கள் அனைவரும் நடு வரிசையில் களமிறங்கி விளையாடுவது இந்தியா அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் உலகக் கோப்பை கால இந்திய அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது .
முதுகு பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை. இதனால் இந்திய உலகக்கோப்பை அணியில் நான்காவது இடத்தில் எந்த வீரரை விளையாட வைக்கலாம் என்று பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் விமர்சகர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் . மேலும் இந்திய அணி நிர்வாகமும் இது தொடர்பாக பல்வேறு வீரர்களை அந்த இடத்தில் பரிசோதனை செய்து வருகிறது .
இந்திய அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் போன்றோர் இளம் வீரர் திலக் வர்மாவை இந்திய அணி நான்காவது இடத்தில் ஆட வைக்க பரிசீலிக்கலாம் என தெரிவித்திருக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெற்று வரும் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா ஒரு இடது கை பேட்ஸ்மேன் ஆக இருப்பதால் இந்திய அணிக்கு அது கூடுதல் பலம் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் மூத்த தொடக்க வீரரான ஷிகர் தவான் இந்திய அணிக்காக நான்காவது இடத்தில் இந்த வீரரை களம் இறக்கலாம் என தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய தவான், ”ஸ்ரேயாஸ் ஐயர் உலகக் கோப்பைக்கு முன்பு உடல் தகுதி பெறவில்லை என்றால் நான்காவது இடத்தில் விளையாடுவதற்கு இந்திய அணி சூர்யகுமார் யாதவை தேர்வு செய்யலாம். இந்திய அணிக்காக t20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதோடு அவருக்கு ஏராளமான சர்வதேச அனுபவமும் இருக்கிறது. இதனால் இந்தியாவிற்காக நான்காவது இடத்தில் உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்படுவார்” என தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவிற்க்கு ஏராளமான அனுபவங்கள் இருந்தாலும் இதுவரை அவர் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக அறிமுகமான இவர் இதுவரை 26 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 511 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இவரது சராசரி 24.33 மேலும் இரண்டு அரை சதங்களும் எடுத்துள்ளார்.. t20 போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் வீரராக விளங்கும் சூர்யகுமார் யாதவால் டி20 யை போன்று ஒரு நாள் போட்டியில் ரன் குவிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.