ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முன்னேறிய ஷிகர் தவான்!
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, வெளியிட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிகர் தவான்(692 புள்ளிகள்) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 13வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேபோன்று அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 595புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 6 இடம் முன்னேறி 54ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், ஷிகர் தவான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரால் இந்த உயரத்தை எட்ட முடிந்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் வழக்கம்போல் 874 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இமாமுல் ஹேக் இரண்டாவது இடத்திலும், தென் ஆப்ரிக்கா அணியின் ரஸ்ஸி வெண்டர் டுசன் மற்றும் குவின்டன் டிகாக் ஆகியோர் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.
மேலும் ஒரு நாள் தொடரில் பெரிதாக சோபிக்காத இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி (774) மற்றும் ரோஹித் சர்மா (770) ஒரு இடம் பின்தங்கி ஐந்து மற்றும் ஆறாவது இடத்தை பிடித்துள்ளனர். இதேபோல் பந்து வீச்சில் ட்ரெண்ட் போல்ட் முதல் இடத்திலும்,இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா 2வது இடத்தையும், பாகிஸ்தான் அணியின் சஹின் ஷா அப்ரிடி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும் இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் சஹால் இரண்டு இடங்கள் கீழே சென்று தரவரிசையில் 18ஆவது இடத்தையும், புவனேஸ்வர் குமார் இரண்டு இடங்கள் கீழே சென்று 26ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதேபோன்று ஒரு நாள் தொடருக்கான சிறந்த ஆல்ரவுண்டர் வரிசையில் வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாகிப் அல்ஹசன் முதல் இடத்தையும், ஆஃப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரஷித் கான் மற்றும் முகமது நபி இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.