சிஎஸ்கே பயிற்சி முகாமில் இணைந்த ஷிவம் தூபே; ரசிகர்கள் மகிழ்ச்சி!

Updated: Wed, Mar 20 2024 15:48 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டவர் ஷிவம் தூபே. கடந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 418 ரன்களை குவித்திருந்தார்.

அதிலும் குறிப்பாக அதிரடி மன்னாக திகழ்ந்த ஷிவம் தூபே அத்தொடரில் மட்டும் 35 சிக்சர்களை பறக்கவிட்டு அனைத்து பந்துவீச்சாளர்களையும் மிரளவைத்திருந்தார். இதனையடுத்து இந்திய அணியிலும் வாய்ப்பை பெற்ற ஷிவம் தூபே கடந்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பேட்டராக மட்டுமின்றி பந்துவீச்சாளராகவும் அசத்தி அத்தொடருக்கான தொடர் நாயகன் விருதை வென்றார். 

அதன்பின் ரஞ்சி கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிவம் தூபே லீக் போட்டியில் காயமடைந்து அத்தொடரிலிருந்து விலகினார். இதனையடுத்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மேற்கொண்டு வந்த ஷிவம் தூபே தற்போது காயத்திலிருந்து மீண்டாலும், ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாகின. 

 

இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியை எட்டியுள்ள ஷிவம் தூபே இன்றைய தினம் சிஎஸ்கே பயிற்சி முகாமுல் இணைந்துள்ளார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது சமூகவலைதள பக்கங்களில் காணொளியாக பதிவிட்டுள்ளது. அவருடன் இணைந்து முஸ்தஃபிசூர் ரஹ்மான், மஹீஷ் தீக்‌ஷனா ஆகியோரும் சிஎஸ்கே பயிற்சி முகாமில் இணைந்துள்ளனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::