ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட சோயிப் அக்தர்!

Updated: Mon, Aug 08 2022 19:49 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் சோயிப் அக்தருக்கு பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். அதற்கு காரணம் அவர் பந்துவீசும் முறை தான்.

சோயிப் அக்தர் ஓடி வருவதை பார்த்தாலே, பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களின் கால்கள் நடுங்கும். அந்த அளவுக்கு தனக்கு என்ற ஒரு பெயரை அவர் படைத்திருந்தார்.

பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டியில் விளையாடிய சோயிப் அக்தர் 178 விக்கெட்டுகளையும், 163 ஒருநாள் போட்டியில் 247 விக்கெட்டுகளையும், 15 டி20 போட்டியில் 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களால் போற்றப்படும் அவர், பாகிஸ்தான் அணிக்காக 14 வருடங்களாக விளையாடி இருக்கிறார்.

தற்போது 46 வயதான சோயிப் அக்தர், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது ஓய்வில் உள்ளார். இது குறித்து ரசிகர்களுக்கு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள சோயிப் அக்தர், பாகிஸ்தானுக்காக மேலும் 5 ஆண்டுகள் விளையாடி இருந்தால் தமது வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கும் என்று கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்த ஓய்வு பெற்ற பிறகும், தாம் வலியால் துடிப்பதாக குறிப்பிட்ட அக்தர், 11 ஆண்டுக்கு பிறகும் வலியால் தான் தூக்கம் கழிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். வேகமாக பந்துவீசி, தமது எலும்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சோயிப் அக்தர், பாகிஸ்தானுக்காக இதை செய்ததில் மகிழ்ச்சி தான் என்றார்.

 

நாட்டுக்காக இன்னும் எத்தனை வலியையும் தாங்கி கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ள சோயிப் அக்தர், ரசிகர்கள் தனது உடல் நலத்துக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சோயிப் அகத்ருக்கு மேற்கொண்டுள்ள அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை