பட்லரை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களைச் சேர்த்தது. இதில் அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் 30 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கியகேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்திருந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரைன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் தனது முதல் டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் 56 பந்துகளை சந்தித்த நரைன் 13 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 109 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி க்ளமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வா, சஞ்சு சாம்சன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ரியான் பாராக்கும் 34 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீராரான ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடியதுடன் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மேலும் இப்போட்டியில் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி அடைந்தது குறித்து பேசிய கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “இந்த தோல்வியை ஜீரணித்துக்கொள்ள மிகவும் கசப்பாக இருக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்திப்போம் என நாங்கள் நினைக்கவே இல்லை. ஜாஸ் பட்லர் தேவைக்கு ஏற்ப ரன் குவித்ததோடு, தனது விக்கெட்டை இழக்காமலும் பார்த்து கொண்டார். எங்கள் பந்துவீச்சாளர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த போட்டியில் நாங்கள் சரியான முறையில் தான் பந்துவீசினோம். ஆனால் கொஞ்சம் தவறு செய்தாலும் பேட்ஸ்மேன்கள் பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்பி விடுகிறார்கள். இது போல் ஒரு தோல்வி தொடருக்கு ஆரம்பத்திலே நடந்திருக்கிறது. இதே தோல்வி கடைசி கட்டத்தில் நிகழ்ந்தால் நிச்சயம் ஏமாற்றமாக இருக்கும். சுனில் நரைன் எங்கள் அணியின் மிகப்பெரும் சொத்தாக இருக்கிறார். அவரால் எப்படிப்பட்ட போட்டியையும் மாற்றி கொடுக்க முடியும்.
மேலும் இப்போட்டியில் பட்லர் விளையாடும் விதத்தைப் பார்த்து பந்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகவே கடைசி ஓவரை வருண் சக்கரவர்த்தியிடம் கொடுத்தேன், ஜோஸ் பட்லர் போன்ற ஒருவர் களத்தில் இருக்கும் போது கடைசி ஓவரை வீசுவது மிக மிக கடினம். இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்வது மிக அவசியம். நாங்கள் செய்த தவறுகளை கண்டறிந்து அதை சரி செய்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.