ஐபிஎல் 2022: பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்த சைமன் கடிச்!
ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக நடப்பு சீசனுக்கு மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்த வருடம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் டாம் மூடி, பிரையன் லாரா, முரளிதரன் ஆகியோருடன் இணைந்து சைமன் கடிச்சும் கலந்துகொண்டார்.
ஏலம் முடிந்த பிறகு தனது உதவிப் பயிற்சியாளர் பொறுப்பை அவர் ராஜினாமா செய்துள்ளார். ஏலத்தில் வீரர்களைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக சைமன் கடிச் விலகினார் என்று கூறப்பட்டாலும் இரண்டரை மாதக் காலம் கரோனா தடுப்பு வளையத்தில் வசிப்பது சிரமம் என அவர் உணந்ததாலும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இந்த முடிவை சைமன் கடிச் எடுத்துள்ளதாக சன்ரைசர்ஸ் தரப்பு பேட்டியொன்றில் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது 46 வயது சைமன் கடிச், ஆஸ்திரேலிய அணிக்காக 2001 முதல் 2010 வரை 56 டெஸ்டுகள், 45 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2015 முதல் ஐபிஎல் போட்டியில் பயிற்சியாளராக கொல்கத்தா, ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகளில் பணியாற்றியுள்ளார். கேகேஆர் அணியில் உதவிப் பயிற்சியாளராகப் பணியாற்றிய சைமன் கடிச், கடந்த வருடம் வரை ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.