ரிஷப் பந்திடம் ஆக்ரோஷசத்தை காட்டிய ரோஹித்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து பவர்ப்ளே 6 ஓவரில் 62 ரன்களை குவித்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பின்னர் கோலி மட்டுமே பொறுப்புடன் ஒருமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் (60) அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்பியதால் இந்திய அணியின் ஸ்கோர் பெரிதாக உயரவில்லை. ஆனால் கோலியின் பொறுப்பான அரைசதத்தால் இந்திய அணி 20 ஓவரில் 181 ரன்கள் அடித்தது.
182 ரன்கள் என்ற இலக்கை அடித்து பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என எதுவுமே சொல்லும்படியாக இல்லை.
கடும் விவாதத்திற்குள்ளான தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் செலக்ஷனில், தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் ஆடவைக்கப்பட்டார். ஆனால் 12 பந்தில் 14 ரன்கள் மட்டுமே அடித்து தனது செலக்ஷனுக்கு நியாயம் சேர்க்காமல் ஏமாற்றமும் அதிருப்தியும் அளித்து ஆட்டமிழந்தார் ரிஷப் பண்ட்.
அதுவும் அவர் அவுட்டான விதம் படுமோசம். ஷதாப் கானின் பவுலிங்கில் அவர் பந்துவீசும் முன்பே திரும்ப முயன்றார் ரிஷப் பண்ட். அதைக்கண்ட ஷதாப் கான் அதற்கேற்ப ஸ்மார்ட்டாக கூக்ளியை வீசினார். ஆனால் அதையும் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார் ரிஷப் பந்த்.
அவர் ஆட்டமிழந்த விதத்தை கண்டு கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்த கேப்டன் ரோஹித் சர்மா டிரெஸிங் ரூமில் ரிஷப் பந்தை வெளுத்துவாங்கினார். அந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது