ரஞ்சி கோப்பை 2024: ஷாய் கிஷோர் அபார பந்துவீச்சு; தடுமாற்றத்தில் மும்பை!

Updated: Sun, Mar 03 2024 13:47 IST
Image Source: Google

ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இதில் இன்று தொடங்கிய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடியது.

அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால், 64.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர், முஷீர் கான் மற்றும் தனுஷ் கோட்யான் ஆகியோர் தங்கள் பங்கிற்கு தலா 2 விக்கெட்டுகளையும் என கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை முஷீர் கான் 24 ரன்களுடனும், மொஹித் அவஸ்தி ஒரு ரன்னுடனும் இன்னிங்ஸை தொடர்ந்தனர். இதில் அவஸ்தி 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

 

அதன்பின் அரைசதம் கடந்து விளையாடிய முஷீர் கானை 55 ரன்களிலும், ஷம்ஸ் முலானியை ரன்கள் ஏதுமின்றியும் வெளியேற்றிய சாய் கிஷோர், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் பின்னடைவை சந்தித்த மும்பை அணியும் 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் இணைந்துள்ள ஷர்துல் தாக்கூர் - ஹர்திக் தோமர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை