SL vs AUS, 1st T20I: வார்னர், ஃபிஞ்ச் அதிரடி; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் முதல் 3 வீரர்கள் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடினர். பதும் நிசாங்கா 36 ரன்களும், அசலங்கா 38 ரன்களும், குணதிலகா 26 ரன்களும் அடித்தனர். ஹசரங்கா 17 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஷ் ஹேசில்வுட் 4 ஓவரில்16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜோஷ் ஹேசில்வுட், ஸ்டார்க்கின் பவுலிங்கில் சரணடைந்த இலங்கை அணி வெறும் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குணதிலகா, நிசாங்கா, அசலங்காவைத் தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடாததால், அந்த அணி சொற்ப ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் - கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர்.
இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய டேவிட் வார்னர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தனது 22ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதற்கிடையில் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் சிறிதுநேரம் தடைப்பட்டது.
பின்னர் ஆட்டம் தொடங்கிய சிறிதுநேரத்திலேயே கேப்டன் ஆரோன் ஃபிஞ்சும் தனது அரைசதம் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் 14 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த டேவிட் வார்னர் 61 ரன்களையும், ஆரோன் ஃபிஞ்ச் 70 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.