SL vs AUS, 2nd T20I: இலங்கையிடம் போராடி வென்றது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் ஜூன் 7, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 டி20போட்டிகள் நடக்கின்றன.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றூ அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. கொழும்புவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிஷங்கா, குணத்திலகா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அசலங்கா - குசால் மெண்டிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசலங்கா 39 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 36 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடுக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். ஆனால் அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளையும், ஜெய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் ஃபிஞ்ச் - டேவிட் வார்னர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 24 ரன்களில் ஃபிஞ்ச் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷும் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் வந்த ஸ்டீவ் ஸ்மித் 5 ரன்னிலும், அதிரடியாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 21 ரன்களிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 9 ரன்களிலும் , க்ளென் மேக்ஸ்வல் 19 ரன்களிலும், ஆஷ்டன் அகர் முதல் பந்திலும் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
ஆனாலும் 7ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மேத்யூ வேட் - ஜெய் ரிச்சர்ட்சன்னுடன் இணைந்து விக்கெட் இழப்பை தடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
ஆஸ்திரேலிய தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேத்யூ வேட் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கைத் தரப்பில் வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.