SL vs AUS, 4th ODI: பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!

Updated: Tue, Jun 21 2022 22:48 IST
SL vs AUS, 4th ODI: Sri Lanka defeat Australia by 4 and clinch the ODI series 3-1 (Image Source: Google)

இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் தொடரில் இலங்கை அணி 2-1 என முன்னிலை வகிக்கும் நிலையில், 4ஆவது ஒருநாள் போட்டி கொழும்பில் இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை தொடரை வென்றுவிடும். ஆனால் ஆஸ்திரேலிய அணியோ தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமென்றால், இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கின.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி டாப் 3 வீரர்களான டிக்வெல்லா(1), நிசாங்கா(13) மற்றும் குசால் மெண்டிஸ்(14) ஆகிய மூவரும் 10 ஓவர்களுக்குள்ளாகவே அணியின் ஸ்கோர் வெறும் 34 ரன்களாக இருந்தபோதே ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் அசலங்காவும் தனஞ்செயா டி சில்வாவும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடி 4ஆவது விக்கெட்டுக்கு 99 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த தனஞ்செயா டி சில்வா 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் தசுன் ஷனாகா  4 ரன்களுக்கு நடையை கட்டினார்.

ஒருமுனையில் நிலைத்து ஆடிய அசலங்காவுடன் 6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெல்லாலகே சில ஓவர்கள் தாக்குப்பிடித்து ஆடி அசலங்காவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட்டை இழந்துவிடாமல் பார்த்துக்கொண்டார். அதனால் அணியின் ஸ்கோர் கொஞ்சம் உயர்ந்தது. 35 பந்தில் 19 ரன்களுக்கு அவரும் ஆட்டமிழந்தார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய அசலங்கா சதமடித்தார். 106 பந்தில் 110 ரன்கள் அடித்து 48வது ஓவரின் 4ஆவது பந்தில் அசலங்கா ஆட்டமிழக்க, 49 ஓவரில் 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை. 

இதையடுத்து இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ரன் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மிட்செல் மார்ஷ் 24, மார்னஸ் லபுசாக்னே 14, அலெக்ஸ் கேரி 19, ட்ராவிஸ் ஹெட் 27, மேக்ஸ்வெல் 1 என வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற டேவிட் வார்னர் எதிரணி பந்துவீச்சை பவுண்டரிக்கு விளாசி ஸ்கோரை உயர்த்தினார். இதில் அரைசதம் கடந்த அவர், சதத்தை பதிவுசெய்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதன்பின் 99 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னர், தனஞ்செய டி சில்வா பந்துவீச்சில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை ஒரு ரன்னில் பறிகொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் இலங்கை அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமானது. 

அவரைத் தொடர்ந்து வந்த காமரூன் க்ரீன் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பட் கம்மின்ஸ் மட்டும் இறுதிவரை அணியின் வெற்றிக்காக போராடினார். அதன்பின் 35 ரன்களை எடுத்திருந்த கம்மின்ஸும் விக்கெட்டை இழக்க, ஆஸ்திரேலிய அணியின் தோல்வியும் உறுதியானது. ஆனாலும் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் மனம் தளராத குன்மேன் கடைசி ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச, கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

அதன்பின் கடைசி பந்தில் குன்மேன் ஆட்டமிழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் சமிகா கருணரத்னே, ஜெஃப்ரி வாண்டர்சே, தனஞ்செய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இலங்கை அணி 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை