SL vs AUS, 5th ODI: இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி!

Updated: Fri, Jun 24 2022 21:42 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதித்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து களமிறங்கியது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 2 ரன்னிலும், குணத்திலகா 8 ரன்னிலும், தினேஷ் சண்டிமல் 6 ரன்களிலும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த குசால் மெண்டீஸ், சரித் அசலங்கா, கேப்டன் தசுன் ஷான்கா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதையடுத்து களமிறங்கிய சமிகா கருணரத்னே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர்.

ஆனாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சமிகா கருணரத்னே அரைசதம் கடந்தார். அதன்பின் 75 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் விக்கெட்டை இழந்தார்.

இதனால் 43.1 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹசில்வுட், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் 10 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 24, ஜோஷ் இங்கிலீஷ் 5 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஷாக்னே - அலெக்ஸ் கேரி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்பின் 31 ரன்களில் லபுஷாக்னே விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலெக்ஸ் கேரி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இதனால் 39.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்றது. இருப்பினும் இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை