SL vs BAN, 3rd T20I: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வங்கதேசம்!
SL vs BAN, 3rd T20I: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் டி20 கிரிக்கெட் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணியும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்திருந்தன. இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கும் பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் குசால் மெண்டிஸ் 6 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய குசால் பெரேரா ரன்கள் ஏதுமின்றியும், தினேஷ் சண்டிமால் 4 ரன்களுக்கும், கேப்டன் சரித் அசலங்கா 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். மேற்கொண்டு கமிந்து மெண்டிஸும் ஒரு பவுண்டரி, ஒரு சிஸர் என 21 ரன்களில் நடையைக் கட்டினார்.
பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஷங்காவும் 46 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜெஃப்ரி வண்டர்சேவும் 7 ரன்களுடன் நடையைக் கட்டினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷனகா 4 பவுண்டரி, 2 சிஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. இதில் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே பர்வேஸ் ஹொசைன் எமான் ரன்கள் ஏதுமின்றி தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த தன்ஸித் ஹசன் மற்றும் கேப்டன் லிட்டன் தாஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் லிட்டன் தாஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: LIVE Cricket Score
இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்ஸித் ஹசன் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 73 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய தாவ்ஹித் ஹிரிடோய் 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வங்கதேச அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.