SL vs IND, 2nd T20I: குசால் பெரேரா அரைசதம்; இந்திய அணிக்கு 162 ரன்கள் இலக்கு!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார்.
அதன்பின் களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். பின்னர் 10 ரன்கள் எடுத்த நிலையில் குசால் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். அதன்பின் நிஷங்காவுடன் இணைந்த குசால் பெரேரா சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்களைச் சேர்த்திருந்த பதும் நிஷங்கா ஆட்டமிழந்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தார். மறுப்பக்கம் அதிரடியாக விளையாடிய குசால் பெரேரா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களை எட்டிய நிலையில் கமிந்து மெண்டிஸ் 26 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்கள் சேர்த்த குசால் பேரேராவும் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தசுன் ஷனகா, வநிந்து ஹசரங்கா ஆகியோர் ரவி பிஷ்னோயின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அவரைத்தொடர்ந்து அணியின் இறுதி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கேப்டன் சரித் அசலங்காவும் 14 ரன்களுடன் நடையைக் கட்ட, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடவுள்ளது.