SL vs PAK, 2nd Test: பந்துவீச்சில் அசத்தும் இலங்கை; தடுமாறும் பாகிஸ்தான்!
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாதா ஃபெர்னாண்டோ, கருணரத்னே ஆகியோர் களமிறங்கினர் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
பொறுப்புடன் ஆடிய பெர்னாண்டோ அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கருணரத்னே 40 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100ஆஅவது டெஸ்ட் போட்டி ஆகும். அவரும் சண்டிமாலும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் மேத்யூஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அரை சதமடித்த சண்டிமால் 80 ரன்னில் வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழந்து 315 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 2ஆவது நாளான இன்று மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி 378 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நசிம் ஷா, யாசிர் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த இமான் உல் ஹக் - கேப்டன் பாபர் ஆசாம் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். ஆனாலும் 32 ரன்களில் இமான் உல் ஹக்கும், 16 ரன்களில் பாபர் ஆசாமும் விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய முகமது ரிஸ்வான், ஃபவத் ஆலாம் ஆகியோர் தலா 24 ரன்கள் சேர்த்த நிலையில் ரமேஷ் மெண்டிஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஹா சலாம் அரைசதம் கடந்தார். பின் அவரும் 62 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் யாசிர் ஷா 13 ரன்களுடன் களத்தில் உள்ளார். இலங்கை தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.