சண்டிமல் அரைசதம் வீண்; இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 48 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 11 ரன்களிலும், ரஜபக்ஷ ரன் ஏதுமின்றியும், சரித் அசலங்கா 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சண்டிமல் அரைசதம் அடித்து தனி ஒருவனாக அணியை மீட்க போராடினார்.
இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் சண்டிமல் 66 ரன்களைச் சேர்த்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.