வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் எவீன் லூயிஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தர். பின்னர் இணைந்த பிராண்டன் கிங் மற்றும் ஷாய் ஹோப் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இப்போட்டியில் சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்த பிராண்டன் கிங் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸும் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து 6 ரன்கள் எடுத்த நிலையில் ரூதர்ஃபோர்டும் தனது விக்கெட்டை இழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 62 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோவ்மன் பாவெல் - குடகேஷ் மோட்டி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
இருவரும் இணைந்து அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன், 6ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த குடகேஷ் மோட்டி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 32 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ரோவ்மன் பாவெலுடன் இணைந்த் ரொமாரியோ ஷெப்பர்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோவ்மன் பாவெல் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் ரொமாரியோ ஷெப்பர்ட்டும் தனது பங்கிற்கு 18 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் மஹீஷ் தீக்சனா, வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணியானது விளையாடவுள்ளது.