SL vs ZIM, 2nd ODI: ஜிம்பாப்வேவை 208 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் கமுன்ஹுகம்வே ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த கும்பி மற்றும் கேப்டன் கிரேக் எர்வின் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கும்பி 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மில்டன் ஷும்பா 26 ரன்களுக்கும், சிக்கந்தர் ரஸா ஒரு ரன்னுக்கும் என ஆட்டமிழந்தனர்.
இதற்கிடையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த கிரேக் எர்வின் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரியான் பர்ல் தனது பங்கிற்கு 31 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் ஜிம்பாப்வே அணி 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மஹீஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா, ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடவுள்ளது.