இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் கமுன்ஹுகம்வே ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த கும்பி மற்றும் கேப்டன் கிரேக் எர்வின் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கும்பி 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மில்டன் ஷும்பா 26 ரன்களுக்கும், சிக்கந்தர் ரஸா ஒரு ரன்னுக்கும் என ஆட்டமிழந்தனர். 

Advertisement

இதற்கிடையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த கிரேக் எர்வின் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரியான் பர்ல் தனது பங்கிற்கு 31 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் ஜிம்பாப்வே அணி 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மஹீஷ் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா, ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. 

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சதீரா சமரவிக்ரமாவும் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து குசால் மெண்டிஸ் 17 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சரித் அசலங்கா ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜனித் லியனகே - சஹான் அராச்சிகே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லியனகே அரைசதம் கடந்தார். அதேசமயம் மறுபக்கம் அராச்சிகே 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தசுன் ஷனகா 7 ரன்களுக்கும், மஹீஷ் தீக்‌ஷனா 18 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜனித் லியனகே 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 95 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து 5 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இறுதியில் இலங்கை அணி கடைசி இரண்டு ஓவர்களில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் துஷ்மந்தா சமீரா - ஜெஃப்ரி வண்டர்சே இணை இருந்தனர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துஷ்மந்தா சமீரா 18 ரன்களையும், ஜெஃப்ரி வண்டர்சே 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை அணி 49 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இதன்மூலம் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News