இலங்கை அணியின் ஆலோசகராக ஜெயசூர்யா நியமனம்!

Updated: Fri, Dec 15 2023 13:23 IST
இலங்கை அணியின் ஆலோசகராக ஜெயசூர்யா நியமனம்! (Image Source: Google)

இந்தியாவில் நடைப்பெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்த அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார். 

ஆனால் அரசியல் தலையீடு இருப்பதாக கூறி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. இதனால் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இலங்கையில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு ஐசிசி மாற்றியுள்ளது. இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு ஐசிசி இந்த முடிவை எடுத்தது. 

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவை  புதிதாக அமைத்த பிறகு, சனத் ஜெயசூர்யாவை இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.  இலங்கை அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்கா இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். 

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில், இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை வீரர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்சியளிக்கும் நபர்கள் அனைவருக்கும் ஆலோசனைகளை வழங்கி அவர்கள் சிறப்பாக செயல்பட உதவும் பொறுப்பு ஜெயசுர்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை