SLW vs INDW, 1st ODI: தீப்தி, ரேனுகா பந்துவீச்சில் 171 ரன்னில் சுருண்டது இலங்கை!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய மகளிர் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று பல்லகலேவில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநால் போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 2 ரன்களிலும், கருணரத்னே ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹாசினி பெரேரா - ஹர்ஷித்தா மாதவி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹாசினி பெரேரா 37 ரன்களிலும், ஹர்ஷித்தா மாதவி 28 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய நிலாஷி டி சில்வாவும் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை வீராங்கனைகள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 48.2 ஓவர்களில் இலங்கை மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங், தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.