SLW vs INDW, 2nd T20I: இலங்கை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் 23 அன்று டி20 தொடங்கியது. அதன்பிறகு நடைபெறும் ஒருநாள் தொடர், ஜூலை 7 அன்று முடிவடைகிறது.
இதில் முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டி20 போட்டி தம்புல்லாவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.
இதில் தொடக்க வீராங்கனை விஷ்மி 45, கேப்டன் சமரி 43 ரன்கள் எடுத்தார்கள். முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்த இலங்கை அணியை இந்தியப் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினார்கள். இதனால் இலங்கை அணி பேட்டர்களில் விஷ்மி, சமரியைத் தவிர வேறு யாராலும் இரட்டை இலக்க ரன்களை எடுக்க முடியவில்லை.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 17 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த மெகனாவும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2ஆயிரம் ரன்களைக் கடந்த ஐந்தாவது இந்திய வீராங்கனை எனும் சாதனையை படைத்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் - யஷ்திகா பாட்டியா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் இந்திய அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.