SLW vs INDW, 3rd ODI: இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!

Updated: Thu, Jul 07 2022 18:05 IST
Image Source: Google

இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. மேலும் முதல் இரு ஒருநாள் ஆட்டங்களை வென்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது ஒருநாள் ஆட்டம் பல்லேகலேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 49 ரன்களும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 75 ரன்களும் பூஜா வஸ்த்ரகர் ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்களுடன் 56 ரன்களும் எடுத்ததால் இந்திய மகளிர் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுக்க முடிந்தது. 

27-வது ஓவரில் 124/6 என நெருக்கடியில் இருந்தபோது கெளரும் பூஜாவும் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். இருவர் கூட்டணி 97 ரன்கள் எடுத்து இந்திய அணி கெளரவமான ஸ்கோரை அடைய உதவி செய்தது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 8ஆம் நிலை மற்றும் அதற்குக் கீழே உள்ள பேட்டர்களில் அதிக அரை சதம் எடுத்தவர் (3) என்கிற பெருமையை பூஜா பெற்றுள்ளார். 

இதையடுத்து இலக்கை துரத்திய இலங்கை விஷ்மி கருணரத்னே 3 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த சமாரி அத்தபத்து - ஹசினி பெரேரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அத்தபத்து 44 ரன்களிலும், ஹாசினி பெரேரா 39 ரன்களோடும் பெவிலியனுக்குத் திரும்பினர். அதைத்தொடர்ந்து களமிறங்கியவர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். 

இதனால் 47.3 ஓவர்களில் இலங்கை மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி 3-0  என்ற கணக்கில் தொடரை வென்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை