சையத் முஷ்டாக் அலி 2022: ஆல் ரவுண்டராக அசத்திய வெங்கடேஷ் ஐயர்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் இந்திய கிரிக்கெட்டில் நுழைந்த வெங்கடேஷ் ஐயர், விரைவில் இந்திய அணியில் இடம் பிடித்தார். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற வெங்கேஷ் ஐயர் முக்கிய காரணமாக இருந்தார்.
ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடாத நிலையில், அவரது இடத்தை வெங்கடேஷ் ஐயர் நிரப்பினார். இந்த நிலையில், ஹர்திக் திரும்பியதும், வெங்கேஷ் ஐயர் தனது இடத்தை இழந்தார். மேலும், கிடைத்த வாய்ப்பிலும் வெங்கடேஷ் ஐயர் கோட்டை விட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனிலும் வெங்கடேஷ் ஐயர் சொதப்பினார்.
இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், சையத் முஸ்டாக் அலி டி20 தொடர் மூலம் வெங்கடேஷ் ஐயர் தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெங்கடேஷ் ஐயர், 4ஆவது வீரராக களமிறங்கினார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி வெங்கடேஷ் ஐயர் ரன்களை குவித்தார்.
இப்போட்டியில் 31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 62 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் மத்திய பிரதேச அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. அத்துடன் வெங்கடேஷ் ஐயர் நிறுத்தவில்லை. பந்துவீச்சிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
தனது அபார பவுலிங் மூலம் 4 ஓவர்களை வீசிய வெங்கடேஷ் ஐயர், 20 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 135 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியை தழவியது. சையத் முஸ்டாக் அலி தொடர் முலம் வெங்கடேஷ் ஐயர் மீண்டும் ஃபார்ம்க்கு திரும்பியுள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.