SMAT 2023: ஆந்திராவை 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்!
இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்று தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் - ஆந்திரா இடையே ஆன கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா - பிரப்சிம்ரன் சிங் முதல் சில ஓவர்களில் டி20 போட்டிக்கு உரிய வேகத்தில், ஒரு ஓவருக்கு 8 ரன்கள் என்ற அளவில் ரன் குவித்து வந்தனர். இதில் பிரப்சிம்ரன் சிங் 21 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த நமன் 8 பந்தில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் அதிரடி வீரர் அன்மோல்ப்ரீத் சிங், அபிஷேக் சர்மா ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் 13ஆவது ஓவரில் இருந்து அதிரடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றனர். ஆந்திரா அணியின் எந்த பந்துவீச்சாளரும் சரியில்லை என்பதை உணர்ந்த அந்த ஜோடி ஓவருக்கு 20 ரன்கள் என்ற இலக்கோடு பவுண்டரிகளாக அடிக்கத் தொடஙினர்.
இதில் அபிஷேக் சர்மா 51 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 9 ஃபோர் 9 சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் சென்ற பின் இன்னும் வேகம் எடுத்த அன்மோல் 6 ஃபோர், 9 சிக்ஸ் அடித்து 26 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவர்களில் பஞ்சாப் விக்கெட்களை இழந்தாலும் சன்வீர் சிங் 6 பந்தில் 15 ரன்கள் எடுத்ததால் இன்னும் அதிக ரன்களை சேர்த்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்து இருந்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆந்திரா அணியில் அஸ்வின் ஹெப்பர், ஸ்ரீகர் பரத், ஹனுமா விஹாரி, ஷேக் ரஷீத், யாரா சந்தீப், தீரஜ் குமார் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனு திரும்பினர். ஆந்திரா அணியில் ரிக்கி பூயி மட்டுமே அதிரடி ஆட்டம் ஆடி 52 பந்துகளில் 104 ரன்கள் குவித்து சதம் கடந்து ஆறுதல் அளித்தார்.
இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் ஆந்திர அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் ஆந்திர அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.