SMAT 2023: திலக் வர்மா சதம் வீண்; ஹைதராபாத்தை வீழ்த்தியது பரோடா!
இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகின்ற வேளையில், இன்னொரு பக்கமாக இந்திய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது 10 அணிகள் இன்று விளையாடி வருகின்ற நிலையில், இன்று நடைப்ற்ற லீக் போட்டியில் பரோடா - ஹைதராபாத் அணிகள் பலப்பர்ட்சை நடத்தின.
இந்த போட்டியில் இந்திய அணிக்கு சமீபத்தில் அறிமுகமாகி விளையாடிய, ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா கேப்டனாக இருந்து விளையாடினார். இன்றைய போட்டியில் அவர் ஆட்டம் இழக்காமல் 69 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 121 ரன்கள் குவித்து அசத்தினார். இவருக்கு அடுத்து இவரது அணியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 23தான். எல்லோரும் கைவிட்ட நிலையில் தனியாளாக நின்று போராடினார்.
இதன்முலம் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியில் திலக் வர்மாவுடன் சேர்ந்து யாரும் சரியாக விளையாடாத காரணத்தினால், 200 ரன்களை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாட வந்த பரோடா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 18.2 ஓவர்களில் மிக எளிதாக ஹைதராபாத் அணியை தோற்கடித்தது. அந்த அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா 36 பந்துகளில் 64 ரன்கள், விஷ்ணு சோலங்கி 37 பந்தில் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்று அசத்தினார்கள்.
இந்தத் தொடரில் இதுவரை திலக் வர்மா ஐந்து போட்டிகளில் விளையாடி 41, 58, 11, 40, 121 என 270 ரன்கள் குவித்திருக்கிறார். இவருடைய ரன் சராசரி 271 என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை நடக்க இருக்கின்ற காரணத்தினால், இந்திய டி20 அணியை கட்டமைக்க வேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது. எனவே தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி தொடர் மிகவும் முக்கியத்துவமானதாக மாறியிருக்கிறது.