சையத் முஷ்டாக் அலி கோப்பை உள்ளூர் டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் ஈ பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் ஆந்திரா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆந்திரா அணிக்கு ஸ்ரீகர் பரத் மற்றும் அஸ்வின் ஹெப்பர் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் முதல் ஓவரில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் அபாரமாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து, முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பின் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்த நிலையில் அஸ்வின் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் ரிக்கி புயும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 68 ரன்கள் எடுத்த கையோடு ரிக்கி புயும், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீகர் பரத் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 93 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆந்திரா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களைக் குவித்தது. மும்பை அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர், மோஹித் அவஸ்தி, ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு பிரித்வி ஷா மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.
இதில் அதிரடியாக தொடங்கிய பிரித்வி ஷா 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் தூபே தனது பங்கிற்கு 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுபக்கம் ரஹானே தனது அரைசதத்தை கடந்தார்.
பின்னர் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 95 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து 5 ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பினை நழுவவிட்டார். இருப்பினும் மறுபக்கம் கள்மிறங்கிய சுர்யான்ஷ் ஷேஜ் 8 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 30 ரன்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் மும்பை அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆந்திரா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் காலிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிங்கியா ரஹானே ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Also Read: Funding To Save Test Cricket