SMAT 2024: உர்வில் படேலின் சாதனையை சமன்செய்த அபிஷேக் சர்மா!
இந்தியாவில் நடைபெற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற குரூப் ஏ பிரிவுக்கான லீக் போட்டியில் மேகாலயா மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராஜ்கோட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மேகாலயா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பஞ்சாப் அணியை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய மேகாலயா அணிக்கு ஆரியன் சங்மா மற்றும் இபித்லத் தபா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சங்ம 13 ரன்களுக்கும், தபா 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜஸ்கிராத் சிங்கும் 15 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த அர்பித் பதேவாரா - யோகேஷ் திவாரி இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் அர்பித் பதேவாரா 31 ரன்களுக்கும், யோகேஷ் திவாரி 20 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் லரி சங்மா 21 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் மேகாலயா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் அணி தரப்பில் அபிஷேக் சர்மா, ரமந்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தின்ர்.
இதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு ஹர்நூர் சிங் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிஷேக் சர்மா முதல் பந்தில் இருந்தே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுபக்கம் ஹர்னூர் சிங் 6 ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து வந்த சலில் அரோராவும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார்.
அவர்களைத் தொடர்ந்து தலிவாலும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 28 பந்துகளில் சதமடித்ததுடன் 8 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி 9.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் மேகாலயா அணியை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியில் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் சதமடித்து அசத்தியதன் மூலம் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் உர்வில் படேலின் சாதனையை சமன்செய்துள்ளார். முன்னதாக நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் உர்வில் படேலும் 28 பந்துகளில் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.