சையித் முஷ்டாக் அலி: நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் நடப்பு சாம்பியன் தமிழ்நாடு அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய தமிழ்நாடு அணிக்கு சரவண குமார் அபாரமாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை நிர்மூலமாக்கினார்.
இதனால் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழ்நாடு அணி தரப்பில் சரவண குமார் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் எளிய இலக்கைத் துரத்திய தமிழ்நாடு அணிக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீரர்கள் ஹரி நிஷாந்த் 14 ரன்னிலும், ஜெகதீஷன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் - கேப்டன் விஜய் சங்கர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதனால் 14.2 ஓவர்களிலேயே தமிழ்நாடு அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விஜய் சங்கர் 43 ரன்களையும், சாய் சுதர்சன் 34 ரன்களையும் சேர்த்தனர்.
Also Read: T20 World Cup 2021
இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி 4ஆவது முறையாக சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதித்துள்ளது.